தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

31.8.14

நல்லாசிரியர் புவனேஸ்வரி



நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பின் வகுப்பாசிரியர் செல்வி.புவனேஸ்வரி அவர்கள்.

வீட்டில் ஒரு அம்மா இருப்பதைப் போல் , பள்ளியில் நினைத்துக் கொள்ளும் அளவிற்கு அன்பான ஆசிரியை . நாங்கள் தான் இவரது முதல் மாணவர்கள் என நினைக்கின்றேன்.இந்த இரண்டு வகுப்புகளில் படிக்கும் போது நினைவில் நின்ற நண்பர்கள் பழனிச்சாமி (தற்போது முட்டை வியபாரம் செய்யும் திருமலையின் அண்ணன், ஓசூரில் பணிபுரிகின்றான்) . வெங்கடேசன் (செங்கல் வரதன் என்று அன்போடு அழைக்கப்படும் ஓய்வு பெற்ற ஆசிரியர் வரதராஜன் அவர்களின் மூத்த மகன், தற்போது மணடல அளவிலான பொறியியல் துறையில் மூத்த அதிகாரி) , செந்தில்நாதன் (விரிவுரையாளர், ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி) , சிங்காரவேலன் ( முன்னாள் பேரூராட்சித்தலைவர் பரமசிவன் அவர்களின் மகன்) , வழக்கறிஞர் சரவணன் ஆகியோர்தான். இந்த பதிவை பார்வையிடும் எனது 4 மற்றும் 5 வகுப்பறை தோழர்கள் இருந்தால் கோபம் கொள்ளாமல் உங்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டுகின்றேன். அதிலும் குறிப்பாக என் வகுப்பறை தோழிகளை பற்றி இங்கே குறிப்பிடவில்லை. பின்பு ஒருமுறை அவர்களை பற்றி பகிர்கின்றேன்.

அறிவியியலில் தாவரங்கள் வேர் மூலம் நீரை கடத்துகின்றன என்பதை வகுப்பறையில் , ஒரு பாட்டிலில் நீரை ஊற்றி , அதில் சிவப்பு நிற மை ஊற்றி அதிலே உடனடியாக பிடுங்கிய ஒரு சிறு செடியை போட்டார். பிறகு சில மணிநேரங்களுக்கு பின் தாவரத்தின் தண்டுப்பகுதியில் சிவப்பாக தெரிந்த நரம்புகளை காட்டிய காட்சிதான் இன்றளவும் எனது அறிவியல் ஆர்வத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றது.

ஒருமுறை எனது அம்மா கையில் சூடு வைத்த போது ( இதை பற்றி விரிவாக பின்னர் விளக்குகின்றேன்), தொடர்ந்து மூன்று நாள் கையில் பர்னால் வைத்து பராமரித்த அன்பு மிகுந்த ஆசிரியர் . இதனால் தான் இன்று என் மாணவ , மாணவிகளிடம் அதே அன்பை என்னால் காட்ட முடிகின்றது.

இன்னும் எழுதகின்றேன் இவரை பற்றி நாளை.....










படிநிலை 1 முதல் 3 வரை.....

ஊத்தங்கரை தொடக்கப்பள்ளியில் தான் எனது கல்விப் பயணம் தொடங்கியது. எல்லோரையும் போல் என்னையும் தலைமையாசிரியர் கிருஷ்ணசாமி ஐயர் காதை தொட்டுக்காட்டச் சொல்லித்தான் சேர்த்தக் கொண்டார். அப்போது உதவித்தலைமையாசிரியராக பரமசிவம் அவர்கள் இருந்தார். 

மூன்றாம் வகுப்பு வரை நடந்த நிகழ்வுகள் எண்ணை தேய்த்த காகிதத்தில் தெரியும் பிம்பம் போல தெளிவற்றதாக இருக்கின்றது. சில ஆசிரியர்களின் பெயர்கள் மட்டும் நினைவில் இருக்கின்றது. ஆசிரியைகள் யசோதா , வசந்தா ,  மாரியம்மாள் , சரஸ்வதி, வனசுந்தரி, மும்தாஜ் , போன்றவர்கள் தான் நினைவில் நிற்கின்றார்கள்.

ஒருமுறை இரண்டாம் வகுப்பில் படிக்கும் போது நடந்த நிகழ்வு மட்டும் நினைவில் நிழலாடுகின்றது. அப்போது மாலை நேரங்களில் பள்ளி முடிவதற்கு முன் உடற்பயிற்சியாக எகிறி குதிக்கவேண்டும். இவ்வாறு குதிக்கும் பொது பல்பத்தினை மூக்கில் வைத்து விளையாடிக் கொண்டே குதித்த போது பல்பம் உள்ளெ சென்று விட்டது. அதன் பிறகு மருத்துவர் ஜனார்தனம் அவர்களிடம் சென்று ஏதோ ஒரு கருவி மூலம் அதை எடுத்து விட்டார்.

அடுத்த பதிவில் இருந்து நினைவோடு நின்ற , இன்றளவும் நிற்கின்ற மனிதர்களைப்பற்றியும் , பல சுவையான நிகழ்வுகளையும் பகிர்கின்றேன்.

26.8.14

அறிவூட்டிய அன்னை.....


ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் 
 சான்றோன் எனக்கேட்ட தாய்.                                  
திருக்குறள் - அதிகாரம் 7 - குறள் 69
          மேற்கண்ட குறள் போன்றவர்கள் தான் அன்னையர். நம்மை பெற்றெடுத்த நாளை விடவும், நாம் உயர்ந்த இடத்தை வாழ்வில் அடையும் போது , தாய் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள்.

                              அதைபோல்தான் எனது அம்மாவும் இருந்தார். அப்பாவை போலவே கண்டிப்பானவர்.   எனது தவறுகளை அப்பா கண்டிக்கும் போது குறுக்கே வரவேமாட்டார். பாசம் , கண்டிப்பு இரண்டையும் சரியாக காட்டியவர். 
                                 சுத்தம் என்பதனை இன்றளவும் என்னால் கடைபிடிக்க முடிகிறதென்றால் , அதற்கு எனது அம்மாதான் காரணம். ”பின் தூங்கி , முன் எழும் ” பண்பு கொண்டவர். இதனால் தான் இன்றும் என்னால் அலாரம் இன்றி காலை 5 மணிக்கு தானாக எழ முடிகின்றது. தெய்வ பக்தி மிகுந்தவர் என்பதால் விரதம் இருத்தல், குளித்த பிறகே சமைத்தல்,  சாப்பிடுதல்  போன்ற அவரது செயல்பாடுகள் , இயல்பாகவே எனக்குள் ஒட்டிக்கொண்டது. சலிக்காமல் வீட்டை சுத்தம் செய்து கொண்டே இருப்பார்.

                    எனக்குள் ஒரு சமையல் திறன் இருக்கிறதென்றால்  , அது என் அம்மாவிடம் இருந்து வந்தது தான். சப்பாத்திக்கு மாவு பிசைந்து , உருட்டி , தேய்த்து, கல்லின் மீது போட்டெடுக்கும் பணியில் , ஏதேனும் ஒரு பணியை நான் செய்வேன். சப்பாத்தி பிசையும் பொது , அதில் வாழைப்பழம் சேர்த்து பிசைவார் அது தனிசுவை தரும். இந்த அனுபவம் பின்னாளில்,  ஆசிரியர் பயிற்சியின் போது சமைத்து சாப்பிடப் பயன்பட்டது. 

                                 தாயம் விளையாடுதல் , பரமபதம் விளையாடுதல் , பல்லாங்குழி விளையாடுதல் என எல்லா விளையாட்டையும் எனக்கு கற்றுக் கொடுத்த குரு அவர்தான். இவ்விளையாட்டுக்களால் எனக்கு கணிதம் இனிப்பானதாக இருந்தது. தாயம் விளையாடும் போது எதிரில் விளையாடுபவர்  கட்டங்களை ஏமாற்றப்பார்ப்பார்கள். அதனால் அவருக்கு முன் நாம் கட்டங்களை எண்ணி வைக்க வேண்டும் என்பதால், கணித அடிப்படை செயல்கள் தெளிவுபட்டது.

         சிலரைப் போல் புறம் சொல்லுதல் , பொய் பேசுதல், பிறரை ஏமாற்றுதல் , வீண் சண்டை செய்தல் போன்ற எந்த செயல்பாட்டிலும் அவர் ஈடுபட்டதில்லை. அதனால் எனக்கும் இவையாவும் பிடிக்காதவையாக மாறிப்போயின. இதனால்தான் இன்று மூன்று மருமகள்களை பெற்ற பிறகும், கூட்டுக் குடும்பமாக நாங்கள் தொடர முடிகின்றது.

            இன்று போல் அன்று தொலைக்காட்சி வசதி இல்லை என்பதால் , புத்தக வாசிப்பு எனது அம்மாவின் முக்கிய பொழுது போக்கு. இது தான் இன்று என்னை படிப்பாளியாக,  படைப்பாளியாக மாற்றி இருக்கின்றது. எனக்கு எழுத்தாளர்களையும், நூலகத்தினையும் அறிமுகம் செய்து வைத்து அறிவுக்கண் திறந்தவர். சிறுவயதில் நான் படித்த ”டாம் சாயர்”  கதை எனக்குள் ஏராளமான செய்திகளை உணர்த்திச் சென்றது. (en.wikipedia.org/wiki/Tom_Sawyer)

               ராஜேஷ்குமார் , ராஜேந்திரகுமார் ,சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் , சுஜாதா , திலகவதி, போன்ற எழுத்தாளர்களை அறிய வாய்ப்பளித்தவர் அம்மாதான். கே.வி.ஆனந்தின் அட்டைப்படங்கள்  கேமரா மீது காதலை உண்டாக்கியது. இன்றைய ராமகிருஷ்ணன் , இறையன்பு , போன்றவர்களின் எழுத்துக்களை படிக்க , அன்று அம்மா தந்த வாசிப்பு பழக்கம் தான் அடிப்படை.

                         இப்படி பல பரிமாணங்களில் என்னை அறிவு பெற வைத்தவர் அம்மாதான். இன்றும் என்னோடு இருக்கும் என் அம்மா  , நான் எத்தனை தவறுகள் செய்த போதும் அன்போடு கண்டித்து மன்னித்தவர். திருமணத்திற்கு முன்பு வரை இரவு எவ்வளவு தாமதமாக வீட்டிற்கு வந்தாலும் தானே வந்து உணவு பரிமாறிவிட்டுதான் தூங்கச் செல்வார். அன்பும் , அறிவும் தந்த அன்னைக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை பொருந்தாது. மேற் சொன்ன திருக்குறளாய் மாற முயற்சிக்கின்றேன்.



                     
       
                          

17.8.14

அப்பா எனும் ஆசிரியர்........





நம் வாழ்வில் நாம் அனைவருமே மூன்று தளங்களில் பயணம் செய்கின்றோம்.
1. வீடு
2. பள்ளி
3. சமூகம்

  • வீட்டில் அம்மா அப்பா, உடன்பிறந்தவர்கள் , உறவினர்கள் மூலம் நாம் நெறிபடுத்தப்படுகின்றோம்.
  • பள்ளியில் ஆசிரியர்கள் மூலம் முறைபடுத்தப்படுகின்றோம்.
  • சமூகத்தில் நண்பர்கள் , சமூக சூழல்கள் மூலம் மேம்படுத்தப்படுகின்றோம்.
                    

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
             மன்னுயிர் கெல்லாம் இனிது.                                               
                 
      மக்கட்பேறு அதிகாரத்தில் 68 வது குறள் கூறுவது போல் எல்லா பெற்றோருக்கும் தம் மக்கள் தம்மை விட அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவர்கள் ஆக வேண்டும் என்ற  ஆசை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தான் என் பெற்றோர்கள்.

"அம்மா என்றால் அன்பு , அப்பா என்றால் அறிவு ” என்பார்கள். ஆனால் எனக்கு சற்று நேர்மாறாக இருந்தனர். அன்பு,கருணை,பாசம்  என்பதெல்லாம் அப்பா மூலம்தான் கற்றுக் கொண்டேன். ஆனால் கண்டிப்பானவர். என் தம்பி செய்யும் தவறுக்கு கூட ”முன் ஏர் சரியாக போனால் தானே , பின் ஏர் சரியாக வரும் ” என என்னைத் தான் கண்டிப்பார். மூத்தவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன்.
எங்கள் அப்பாவிற்கு எண்ணெய் வியாபாரம் தான் தொழில். பள்ளி நாட்களில் தினசரி நான் மதிய உணவிற்கு பின் , அப்பாவை மதிய உணவிற்கு அனுப்பிய பிறகு தான் பள்ளிக்கு செல்வேன். அதனால் கைச்செலவிற்கு அப்பாவுக்கு தெரியாமல் 5 ரூபாய் எடுத்துக்கொள்வேன்.1980 களில் இது பெரிய தொகை. நண்பர்களுக்கு தீனி வாங்கிக்கொடுத்து , நானும் தின்று தீர்ப்பேன். இது எங்கள் வீட்டில் குடியிருந்த என் வகுப்பறை தோழர்கள் நாராயணன் (தற்போது ரமணி மீயூசிகல்ஸ் உரிமையாளர்) மற்றும் பாலமுருகன் (எஸ்பி டிராவல்ஸ் உரிமையாளர்) ஆகியோர் மூலம் என் அப்பாவிற்கு தெரிந்து விட்டது.
அவ்வளவு தான் அன்று இரவு சாட்டையோடு வந்தார், விளாசி தள்ளினார். 
நம் வீட்டுப் பணம் என்றாலும் கேட்காமல் எடுக்கக்கூடாது என்பது புரிந்தது. 

மிகச்சிறந்த இசை ரசிகர் . காலை நேரத்தில் வானொலியை இசைக்க விட்டு உடன் இவரும் பாடிக் கொண்டிருப்பார். இவரால்தான் இசையின் மீது எனக்கு காதல் பிறந்தது. இன்றளவும் பாடிக்கொண்டிருக்கின்றேன். மாவட்ட அளவில் பாடல் பாடும் ஆசிரியர்கள் தேர்வில் கலந்து கொண்ட 90 பேர்ல் 7 வதாக வந்தது இவரால் தான்.
மிகுந்த கோவக்காரர். ஆனால் யாரிடமும் சண்டை போட்டுப் பார்த்ததில்லை. அதனால் தான்  , இன்று வரை நான் யாரிடமும் கோபமாக பேசியதில்லை.

1980 களில் மண்ணெண்ணை என்பது மிகவும் முக்கியமான எரிபொருள். எனவே பள்ளியில் அனைத்து ஆசிரியர்களுக்கும் என் அப்பாவை நன்றாக தெரியும். இது பள்ளியில் நான் அடக்கமான  , நல்ல மாணவனாக வளர வேண்டிய கட்டாய சூழலை  எனக்கு உருவாக்கிவிட்டது. எனக்கு வந்த ஆசிரியர்களில் முசபர்கான் ஆசிரியர்  , ஷெரீப் ஆசிரியர் ஆகியோர் எனது அப்பாவிற்கே ஆசிரியர்கள். பழனி ஆசிரியர் எங்கள் வீட்டில் குடியிருந்தவர். தர்மலிங்கம் ஆசிரியர் எனது அப்பாவின் வகுப்பறை தோழர். உடற்கல்வி ஆசிரியர் முருகேசன் உறவினர். இப்படி பலரும்  இருந்தது  , என்னை நல்ல மாணவனாக இருக்க வைத்தது. 
பத்தாம் வகுப்பிற்கு பின் இனியும் வீட்டிலிருந்தே படித்தால் நமது கலைத்திறன்களை வளர்த்துக் கொள்ள முடியாது என்பதால் வெளியில் சென்று தான் படிப்பேன் எனச் சொல்லிவிட்டேன். அப்போது ஊத்தங்கரையில் இருந்து நிறைய மாணவ , மாணவிகள் மேல்நிலைப் படிப்பிற்காக வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள , ஜவ்வாது மலை மீது அமைந்த அத்திப்பட்டு என்ற ஊரில் உள்ள , புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்திருந்தனர். எனது பள்ளி தோழன் செந்தமிழ்செல்வன் (மென்பொருள் பொறியாளர், பெங்களூர்) மூலம் இந்த பள்ளியை பற்றி தெரிந்து கொண்டு அப்பாவிடம் சொல்லிச் சேர்ந்தேன். அந்த இரண்டு ஆண்டுகளும் எனக்கு வசந்த காலம். பேச்சு , நடிப்பு , பாடல் என பல்துறையிலும்  , எனக்குள்ள ஆர்வத்திற்கு நல்ல தீனி கிடைத்தது. ஒரு முறை நாடக காட்சியில் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக  , பயிற்சியாளரிடம் உண்மையாகவே கன்னத்தில் அடி வாங்கி நடித்தது மறக்க முடியாதது.
பனிரெண்டாம் வகுப்பிற்கு பின்  , எனது கனவான சினிமாதுறை சார்ந்து படிப்பதாக சொன்னபோது ஏனோ அதை அப்பா ஏற்கவில்லை. இன்றளவும் அவர் மீது எனக்கு உள்ள மன வருத்தம் அது மட்டும் தான்.   அன்று மிகவும் பிரபலமான படிப்பான ஆசிரியர் பயிற்சிக்குத்தான் அனுப்புவேன் என்று கூறிவிட்டார். 731 மதிப்பெண் எடுத்த என்னை  , ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் சேர்க்க 2 மாதங்கள் அலைந்து  , திரிந்து திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்த்து விட்டார். இந்த இரண்டு ஆண்டுகளும் எனக்கு இன்னுமொரு வசந்த காலம். பேச்சு , நடிப்பு , பாடல் இவற்றோடு, சமூக பிரச்சனைகளை பற்றிய அறிவு கிட்டியது. திராவிடர் கழக பொதுச்செயலாளர் மானமிகு. கி.வீரமணி அவர்களோடு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆசிரியர் பயிற்சி முடித்து நான் வரும் போது கிளைக்கோமா(www.glaucoma.org) என்ற கண் நோயால் பாதிக்கப்பட்டு ஒரு கண்பார்வையை அப்பா இழந்திருந்தார். மேற்கொண்டு படிக்க செல்லாமல் , அப்போது அப்பா நடத்தி வந்த கோழிக்கடையை பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலுக்கு உள்ளானேன்.
அப்போது முதல் தம்பி நந்தகுமார் கல்லூரி மூன்றாம் ஆண்டும் , இரண்டாவது தம்பி பூபதி 8 - ம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தார்கள். குடும்ப சூழலால் 18 வயதிலேயே தொழில் செய்ய தொடங்கினேன்.

கோழிக்கடை நடத்தினாலும் படித்த படிப்பு மறந்து விடக்கூடாது என்பதால்  , இன்றும் நடந்து கொண்டிருக்கும் SUCCESS TUTORIAL COLLEGE  அண்ணன் மூர்த்தி அவர்களிடம் பணிபுரிந்தேன். அந்த அனுபவத்தில் கோடைவிடுமுறையில் 1994-ல் ENGLISH GRAMMAR CLASS நடத்தினேன். அங்கு மாணவர்கள் மூலம் , எனது திறமையை கேட்டறிந்த எனது அப்பாவின் நண்பரும் , எனது குருநாதருமான ஆசிரியர் தர்மலிங்கம் அவர்கள், அவரது தனிவகுப்பினை (TUTION CENTRE) கவனிக்கும் பொறுப்பினை கொடுத்தார். இங்குதான் அருள் (கலைமகள் கம்பியூட்டர்) அறிமுகமானார். இங்கு இரண்டு ஆண்டுகள் இருந்த போது படித்த பல மாணவர்கள் இன்று சிறந்த இடங்களில் உள்ளனர். இதே நேரத்தில் என்.வெள்ளாளப்பட்டி பள்ளியில் நானும் நண்பர் அருளும் ஆசிரியராக ரூ.500 - க்கு பணி செய்தோம். 

எப்படியாவது சினிமாத்துறைக்கு சென்று விட வேண்டும் என்ற வேட்கையோடு இருந்த போது , 1995 -ல்  TNPSC மூலம் இடைநிலை ஆசிரியர் தேர்வு நடந்தது. வேலை கிடைத்துவிட்டால் மாட்டிக் கொள்வோம் என்பதால் தேர்வை சரியாக எழுதாமல் விட்டேன். ஆனால் 1996 -ல் முன்னுரிமை அடிப்படையில் வேலை கிடைத்தது. அப்பா , அம்மா , எங்கள் வீடுகளில் குடியிருந்த அக்ரி சார் , ஆசிரியர் முருகேசன் ஆகியோரின் வற்புறுத்தலால் பணியில் சேர்ந்தேன். இதோ 18 பணி ஆண்டுகளை கடந்து விட்டேன். இன்றும் என் அப்பா என்னோடு இருந்து கொண்டு , இன்னும் என்னை சிறு குழந்தையென நினைத்து அறிவுரைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்.

எனது தம்பிகள் இருவரும் திருமணமாகி  , தனித்தனியாக குடி அமர்ந்து விட்ட போதும், எங்கள் உறவுச்சங்கிலியை துண்டாகி விடாமல் பாதுகாத்து வருபவர் எங்கள் அப்பா தான். சில நேரங்களில் இவர் என்னோடு ஊத்தங்கரையில் இருப்பார். எனது அம்மா சென்னையில் என் தம்பியோடு  இருப்பார். அப்போது , எனது அம்மாவிடம் இவர் பேசிவிட்டு , நான் கேட்காத போதும் ” இரும்மா பெரியவன் உன்கிட்ட பேசனும்மாம்னு ” போனை எங்கிட்ட கொடுப்பார். நான் பேசி முடித்து வைத்த பிறகு ” சும்மா நல்லா இருக்கீங்களா ? நீ கேட்டா போதும் அவங்களுக்கு சந்தோசம்னு”  சொல்லுவார். இப்படி எங்களுக்குள் உறவு நூல் அறுந்துவிடாமல் இருக்கிப்பிடிக்கும் இவரிடம் நான் கற்றுக் கொள்ள இன்னுமும் இருக்கின்றது. நன்றி அப்பா.......        


10.8.14

சமர்பணம்......

இந்த வலைப்பதிவு மூலமாக இந்த உலகிற்கு என்னை அறிமுகம் செய்த என் தாய் - தந்தை தொடங்கி பலரையும் பற்றி பேசப்போகின்றேன். அதன் தொடக்கமாக இந்த வலைப்பதிவை என் பெற்றோருக்கு சமர்பணம் செய்கின்றேன்....