ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
திருக்குறள் - அதிகாரம் 7 - குறள் 69
மேற்கண்ட குறள் போன்றவர்கள் தான் அன்னையர். நம்மை பெற்றெடுத்த நாளை விடவும், நாம் உயர்ந்த இடத்தை வாழ்வில் அடையும் போது , தாய் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள்.
அதைபோல்தான் எனது அம்மாவும் இருந்தார். அப்பாவை போலவே கண்டிப்பானவர். எனது தவறுகளை அப்பா கண்டிக்கும் போது குறுக்கே வரவேமாட்டார். பாசம் , கண்டிப்பு இரண்டையும் சரியாக காட்டியவர்.
சுத்தம் என்பதனை இன்றளவும் என்னால் கடைபிடிக்க முடிகிறதென்றால் , அதற்கு எனது அம்மாதான் காரணம். ”பின் தூங்கி , முன் எழும் ” பண்பு கொண்டவர். இதனால் தான் இன்றும் என்னால் அலாரம் இன்றி காலை 5 மணிக்கு தானாக எழ முடிகின்றது. தெய்வ பக்தி மிகுந்தவர் என்பதால் விரதம் இருத்தல், குளித்த பிறகே சமைத்தல், சாப்பிடுதல் போன்ற அவரது செயல்பாடுகள் , இயல்பாகவே எனக்குள் ஒட்டிக்கொண்டது. சலிக்காமல் வீட்டை சுத்தம் செய்து கொண்டே இருப்பார்.
எனக்குள் ஒரு சமையல் திறன் இருக்கிறதென்றால் , அது என் அம்மாவிடம் இருந்து வந்தது தான். சப்பாத்திக்கு மாவு பிசைந்து , உருட்டி , தேய்த்து, கல்லின் மீது போட்டெடுக்கும் பணியில் , ஏதேனும் ஒரு பணியை நான் செய்வேன். சப்பாத்தி பிசையும் பொது , அதில் வாழைப்பழம் சேர்த்து பிசைவார் அது தனிசுவை தரும். இந்த அனுபவம் பின்னாளில், ஆசிரியர் பயிற்சியின் போது சமைத்து சாப்பிடப் பயன்பட்டது.
தாயம் விளையாடுதல் , பரமபதம் விளையாடுதல் , பல்லாங்குழி விளையாடுதல் என எல்லா விளையாட்டையும் எனக்கு கற்றுக் கொடுத்த குரு அவர்தான். இவ்விளையாட்டுக்களால் எனக்கு கணிதம் இனிப்பானதாக இருந்தது. தாயம் விளையாடும் போது எதிரில் விளையாடுபவர் கட்டங்களை ஏமாற்றப்பார்ப்பார்கள். அதனால் அவருக்கு முன் நாம் கட்டங்களை எண்ணி வைக்க வேண்டும் என்பதால், கணித அடிப்படை செயல்கள் தெளிவுபட்டது.
சிலரைப் போல் புறம் சொல்லுதல் , பொய் பேசுதல், பிறரை ஏமாற்றுதல் , வீண் சண்டை செய்தல் போன்ற எந்த செயல்பாட்டிலும் அவர் ஈடுபட்டதில்லை. அதனால் எனக்கும் இவையாவும் பிடிக்காதவையாக மாறிப்போயின. இதனால்தான் இன்று மூன்று மருமகள்களை பெற்ற பிறகும், கூட்டுக் குடும்பமாக நாங்கள் தொடர முடிகின்றது.
இன்று போல் அன்று தொலைக்காட்சி வசதி இல்லை என்பதால் , புத்தக வாசிப்பு எனது அம்மாவின் முக்கிய பொழுது போக்கு. இது தான் இன்று என்னை படிப்பாளியாக, படைப்பாளியாக மாற்றி இருக்கின்றது. எனக்கு எழுத்தாளர்களையும், நூலகத்தினையும் அறிமுகம் செய்து வைத்து அறிவுக்கண் திறந்தவர். சிறுவயதில் நான் படித்த ”டாம் சாயர்” கதை எனக்குள் ஏராளமான செய்திகளை உணர்த்திச் சென்றது. (en.wikipedia.org/wiki/Tom_Sawyer)
ராஜேஷ்குமார் , ராஜேந்திரகுமார் ,சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் , சுஜாதா , திலகவதி, போன்ற எழுத்தாளர்களை அறிய வாய்ப்பளித்தவர் அம்மாதான். கே.வி.ஆனந்தின் அட்டைப்படங்கள் கேமரா மீது காதலை உண்டாக்கியது. இன்றைய ராமகிருஷ்ணன் , இறையன்பு , போன்றவர்களின் எழுத்துக்களை படிக்க , அன்று அம்மா தந்த வாசிப்பு பழக்கம் தான் அடிப்படை.
இப்படி பல பரிமாணங்களில் என்னை அறிவு பெற வைத்தவர் அம்மாதான். இன்றும் என்னோடு இருக்கும் என் அம்மா , நான் எத்தனை தவறுகள் செய்த போதும் அன்போடு கண்டித்து மன்னித்தவர். திருமணத்திற்கு முன்பு வரை இரவு எவ்வளவு தாமதமாக வீட்டிற்கு வந்தாலும் தானே வந்து உணவு பரிமாறிவிட்டுதான் தூங்கச் செல்வார். அன்பும் , அறிவும் தந்த அன்னைக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை பொருந்தாது. மேற் சொன்ன திருக்குறளாய் மாற முயற்சிக்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக